பயங்கரவாதிகளுக்கு உதவிய இலங்கை நபருக்கு வலைவீச்சு

இலங்கையில் இருந்து நான்கு பயங்கரவாதிகள், குஜராத் மாநிலம் ஆமதாபாத் வருவதாக அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு சமீபத்தில் தகவல் வந்தது.

இதையடுத்து, கடந்த 19ம் தேதி ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை நடத்திய போலீசார், இலங்கையில் இருந்து சென்னை வழியாக வந்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகமது நுஸ்ரத், 46, முகமது நுப்ரான், 27, முகமது பரிஸ், 35, முகமது ரஸ்தீன், 43 ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த அபு பக்கர் என்பவரது கட்டளையின்படி, அவர்கள் இந்தியா வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இலங்கை போலீசாருக்கு பயங்கரவாதிகள் தொடர்பான விபரங்களை இந்திய போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, நான்கு பயங்கரவாதிகளும் இந்தியா வர உதவிய இலங்கையின் டெமடகோடா பகுதியைச் சேர்ந்த ஒஸ்மாண்ட் கெரார்டு, 46, என்பவரை அந்நாட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

அடிக்கடி உருவத்தை மாற்றி, மாறுவேடமிட்டு சுற்றித் திரியும் அவரை கண்டுபிடிப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் இலங்கை போலீசார் அறிவித்துள்ளனர்.

அதேசமயம் ஒஸ்மாண்ட் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேரின் விபரங்களையும் இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, பயங்கரவாதிகள் நான்கு பேருக்கும் உதவிய சகோதரர்கள் இருவரிடமும் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.