ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஹரியாணாவின் மகேந்திரகர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இப்போதே இண்டியா கூட்டணி தோல்வியை உணரத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீதத்தில் வேறுபாடுகள் இருக்கின்றன. வாக்குப்பதிவு சதவீதம் தாமதமாக வெளியிடப்படுகிறது என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் புலம்ப தொடங்கிவிட்டனர்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்கும் என்பதை சிறு குழந்தைகள்கூட அறிந்து வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல்வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. பாரதத்தில் முஸ்லிம்களுக்கே முதலிடம் என்று அந்த கட்சி கூறுகிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க இண்டியா கூட்டணி விரும்புகிறது.
மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை அந்த மாநில உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நான் உயிரோடு இருக்கும்வரை எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது.
பாரத மக்கள் ஒவ்வொரு நாளும் ராம மந்திரத்தை உச்சரிக்கின்றனர். மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ராம மந்திரத்தை உச்சரிப்போரை கைது செய்வார்கள். ஒட்டுமொத்த பாரதத்தில் இருந்து ராமரை அகற்ற காங்கிரஸ் விரும்புகிறது. அந்த கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதை அனுமதிக்கவில்லை. பாஜக ஆட்சிக் காலத்தில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 370-வது சட்டப்பிரிவு மூலம் காஷ்மீர் தனி நாடாக பாவிக்கப்பட்டு வந்தது. அங்கு தேசிய கொடியைகூட ஏற்ற முடியாத சூழல் நிலவியது. பாஜக ஆட்சிக் காலத்தில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீரில் மூவர்ண கொடி கம்பீரமாக பறக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஹரியாணா மக்கள் தேர்தலில் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் நல்லாட்சியை வழங்கி உள்ளோம். இந்த காலத்தில் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சரி செய்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகிறோம். இதன்காரணமாக ஹரியாணா மட்டுமன்றி நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய சாலைகளால் டெல்லி, சண்டிகர் இடையிலான தொலைவு குறைந்திருக்கிறது. துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை ஹரியாணாவின் குருகிராம் மக்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியிருக்கிறது. பாஜக ஆட்சி அமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய புரட்சி நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.