கடந்த 2021-ல் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு ஆசிரியர் பணி நியமன ஊழல் விவகாரம் தெரிந்திருந்தும் அதை மூடி மறைத்துவிட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட குணால் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-ம் ஆண்டில் மாநில பள்ளிக்கல்வித் துறை மூலம் ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. மொத்தமுள்ள 24 ஆயிரத்து 640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 25 ஆயிரத்து 753 பேருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணையை மாநில அரசு வழங்கியது. இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த ஊழலில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத் துறையால் கடந்த 2022-ல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குக்கான தீர்ப்பு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வழங்கப்பட்டது. ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 26 ஆயிரம் 25 ஆயிரத்து 753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, பாஜக வேட்பாளரை பாராட்டிப் பேசி வந்த குணால் கோஷ் திரிணமூல் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் குணால் கோஷ் கூறியதாவது: பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறை மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருப்பது 2021-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே கட்சி தலைமைக்குத் தெரிய வந்தது.
இந்த ஊழல் விவகாரம் தெரியவேதான் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியதும் அன்றைய கல்வி அமைச்சராக இருந்து வந்த பார்த்தா சாட்டர்ஜீயை அவசர அவசரமாக தொழிற்துறை இலாக்காவுக்கு மாற்றியது. இவ்வாறு அவர் கூறினார்.