சென்னை கடற்கரை – வேலுார் கன்டோன்மென்ட் பயணியர் ரயில், வரும் 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை — வேலுார் கன்டோன்மென்ட் வரை தினமும் பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க, பல ஆண்டுகளாக பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி, ஒரு நாள் மட்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
இதற்கிடையில், சென்னை கடற்கரை — வேலுார் கன்டோன்மென்ட் பயணியர் ரயிலை, திருவண்ணாமலை வரை நீட்டித்து இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீட்டிப்பு, வரும் 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6:00க்கு புறப்படும் ரயில், இரவு 9:35 மணிக்கு வேலுார் கன்டோன்மென்ட்டை அடையும். அங்கிருந்து இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு, 12:05 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5:40 மணிக்கு வேலுார் கன்டோன்மென்டை அடையும். அங்கிருந்து காலை 9:50க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்து சேரும். சென்னை கடற்கரை — திருவண்ணாமலை இடையே கட்டணம் 50 ரூபாய். சென்னை – திருவண்ணாமலை தடத்தில் பயணியர் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.