கடந்த 1987-88-ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற தொடராக ராமாயணம் ஒளிபரப்பானது. இதில் ராமர் வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் அருண் கோவில் (68). மும்பைவாசியான இவரை பாஜக, உ.பி.யின் மீரட் மக்களவைத் தொகுதி வேட்பாளராக்கியது. மீரட்டில் அருண் கோவில் பிரச்சாரத்தை தொடங்கிய நாள்முதல் காவிநிற குர்தா, பைஜாமா, தோளில் துண்டு, பழங்கால வகை செருப்பு எனப் பக்தி தோற்றத்தில் இருந்தார்.
இவருடன் தொலைக்காட்சியில் சீதாவாக நடித்த தீபிகா, லட்சுமணனாக நடித்த சுனில் லஹரி ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர். இவர்களது தோற்றம் மீரட்வாசிகளை ராமாயண காலத்துக்கே கொண்டு செல்லும் வகையில் இருந்தது. மீரட்டில் ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கு மறுநாளே அருண் கோவில் மும்பை திரும்பியது காங்கிரஸின் விமர்சனத்துக்கு உள்ளாகி விட்டது.
இதுகுறித்து உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறும்போது, “பேண்ட் ஷர்ட், ஷுக்கள், தொப்பி என நவீனத் தோற்றத்துக்கு பாஜகவின் ராமர் மாறி விட்டார். வாக்குப்பதிவு முடிந்ததுமே தனது வீடான மும்பைக்கு திரும்பி விட்டார். மீரட்வாசிகள் இடையே இவருக்கு வாழப் பிடிக்கவில்லை போலும். இதுதான் இவர்களது உண்மை வாழ்க்கை” என விமர்சித்துள்ளார்.
அஜய் ராய் மேலும், “மீரட் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு அருண் கோவிலால் பதிலளிக்க முடியவில்லை. இது அவரது அறியாமையை காட்டுகிறது. இதுபோன்றவர்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அருண் கோவில் தனது எக்ஸ் பதிவில், “கடந்த மார்ச் 24-ல் எனது பெயரை கட்சி அறிவித்த பிறகு, அடுத்த 2 நாட்களில் மீரட் வந்தேன். தொடர்ந்து ஒரு மாதம் பிரச்சாரமும் செய்தேன். இங்கு அன்பும், ஆதரவும் காட்டியவர்களுக்கு நன்றி.
தற்போது பாஜகவின் பிரச்சாரப் பணியை செய்வதற்காக மும்பை வந்துள்ளேன். இப்பணிகளை முடித்த பிறகு நான் மீண்டும் மீரட் வருவேன், பொதுமக்கள், பாஜகவினரின் உதவியுடன் பிரதமர் மோடி தலைமையில் எனது பொறுப்புகளை செய்வேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
மீரட் மக்களவை தொகுதியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தமுறை அருண் கோவிலை எதிர்த்து சுனிதா வர்மா எனும் தலித் சமூக வேட்பாளரை சமாஜ்வாதி கட்சி நிறுத்தியுள்ளது. முன்னாள் மேயரான சுனிதாவின் கணவர் சமாஜ்வாதி எம்எல்ஏவாக உள்ளார். தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேவ்ரத் தியாகி போட்டியிடுகிறார்.