நடமாடும் கழிப்பறை வாகனம் பெண் போலீசார் வேண்டுகோள்

‘தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடும் இடங்களில், பல மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி இருப்பதால், அங்கு நடமாடும் கழிப்பறை வாகனங்களை இயக்க வேண்டும்’ என, பெண் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாதாரண நாட்களில், வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு, திருவிழா, பொதுக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில், சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆண், பெண் போலீசார் இயற்கை உபாதையை கழிக்க சிரமப்படுகின்றனர். இவர்களுக்காக வாங்கப்பட்ட நடமாடும் கழிப்பறை வாகனங்கள் இயக்கப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், காவல் துறை உயர் அதிகாரிகள் இதை மறுத்து வந்தனர். சென்னை மாநகர போலீசில் மட்டும்,10 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் உள்ளன. இதில், போக்குவரத்து போலீசாருக்கு இரண்டு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும், இரண்டு இந்தியன் வகை, இரண்டு மேற்கத்திய வகையிலான கழிப்பறைகள், உடைகள் மாற்றும் அறை, கை கழுவ இரண்டு, ‘வாஷ் பேஷின்’கள் உள்ளன.

இந்த வாகனங்கள் சுத்தமாக பரமாரிக்கப்பட்டு, தினமும் இயக்கப்படுகின்றன. ஒரு வாகனம், தினமும் தலைமை செயலகத்தில் நிறுத்தப்பட்டு, ஆண், பெண் போலீசார் பயன்படுத்தி வருவதாக கூறி வந்தனர். ஆனால், இந்த வாகனங்கள் முறையாக இயக்கப்படுவது இல்லை என, மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெண் போலீசார் கூறியதாவது:

லோக்சபா தேர்தலை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாலை, 5:00 மணிக்கு ஒரு இடத்திற்கு வருகின்றனர் என்றால், நாங்கள் காலை, 5:00 மணியில் இருந்து அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் திரள்கின்றனர். இந்த இடங்களில் முழு நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.

தலைவர்கள் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எங்களுக்கு இயற்கை உபாதை கழிக்க வசதி இல்லை. வீடுகளில் கேட்கவும் தயக்கமாக உள்ளது. வெயில் வாட்டுகிறது. ஆனால், இயற்கை உபாதையை கழிக்க வேண்டுமே என்பதற்காக போதிய அளவு தண்ணீர் கூட குடிப்பது இல்லை. எங்களுக்கு பணி ஒதுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு, அந்த இடங்களின் சூழல் தெரியும். அதற்கு ஏற்ப, ஆண், பெண் போலீசாருக்கு வாங்கப்பட்ட நடமாடும் கழிப்பறை வாகனத்தை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.