சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் துறைமுகத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன. சீனா தனது கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தனது கடற்படையையும் தொடர்ந்து வலுவாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தோ – பசிபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் போர்க்கப்பல்களை பராமரிக்க மேற்கத்திய நாடுகள் தற்போது இந்தியாவை சார்ந்திருப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கப்பல்களை சொந்த நாட்டில் பழுது பார்க்க செலவும் அதிகமாகிறது, காலதாமதமும் ஏற்படுகிறது.
தென் சீன கடல் பகுதிக்கு அருகே இந்தியா அமைந்துள்ளதால், இங்குள்ள கப்பல் கட்டும் தளங்களை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்தும், அமெரிக்காவும் முடிவு செய்தன. இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவ உறவுகளும் தற்போது உச்சத்தை எட்டியுள்ளன. இதனால் அமெரிக்க கடற்படை சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு பழுது பார்க்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இங்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன. முதல் கப்பலாக அமெரிக்க கடற்படை யுஎஸ்என்எஸ் சால்வார் போர் கப்பல் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளது. இதே கப்பல் கட்டும் தளத்தில் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் ஆர்எப்ஏ அர்கஸ், ஆர்எப்ஏ லைம் பே ஆகிய போர்க்கப்பல்களும் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளன. இங்கிலாந்து போர்க்கப்பல்கள், இந்திய கப்பல் கட்டும் நிறுவனத்தில் பழுது பார்க்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.