பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற போலியான பிம்பம் 2024 மக்களவை தேர்தலில் உடைக்கப்படும் என்று பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். தமாகா சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ரம்ஜான் நோன்பும் ஒன்று. இஸ்லாமியர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க கூடிய கட்சிகள் அனைத்தும் ஒரே மேடையில் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமியர் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும் பாடுபட்டு வருபவர் பிரதமர் மோடி, 3-வது முறையாக பிரதமராக வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கே கூட்டணி கட்சித் தலைவர்கள் கூடியுள்ளனர். இக்கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும். சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டணி என்ற பிம்பம் உடையும்” என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, “இஸ்லாமிய சொந்தங்களோடு கொண்டாடும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஜி.கே.வாசன், அரசியலில் மிகவும் எளிமையானவர். 6 முஸ்லிம் நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு அளித்துள்ளனர்.
சிறுபான்மை மக்களவை அரவணைத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அவர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் இல்லை. எங்கும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதில்லை. இது புரியாதவர்கள், பாஜக குறிப்பிட்ட சமுதாயத்துக்கு, குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான கட்சி என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. அதற்கு வழிகாட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் நாம் பெறும் வெற்றி மூலம் அந்த போலியான பிம்பம் உடைக்கப்படும்” என்றார். அமமுக தலைவர் டிடிவி தினகரன் பேசும்போது, “நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒரே உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் சிறுபான்மையினருக்கு எதிரானவர் போல பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சிறுபான்மையினர் ஆதரவோடு இந்த கூட்டணி வெற்றிபெறும். அப்போது அந்த போலியான பிம்பம் உடைக்கப்படும்” என்றார்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “புனித ரமலான் மாதத்தில் எந்த பணிகளைத் தொடங்கினாலும் வெற்றிபெறும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். கூட்டணி கட்சித் தலைவர்களை ஒன்று சேர்த்துள்ள ஜி.கே.வாசனின் முயற்சியும் பெற்றி பெறும். அவரது நோக்கம் நல்ல நோக்கம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்களான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், காமராஜர் மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர்-தலைவர் தேவநாதன் யாதவ், தமாகா பொருளாளர் ராமன், தமாகா சிறுபான்மையினர் அணித் தலைவர் அப்பாஸ், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா, அகில இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.