வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணை நடத்தியதாகவும், அதில், கனடாவுக்கான இந்திய துாதரக அதிகாரிகள் உட்பட சில இந்திய அதிகாரிகளின் தகவல் பரிமாற்றங்கள் ஆராயப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டன. இந்த உளவு தகவல்கள் கனடாவில் இருந்து மட்டும் திரட்டப்படவில்லை. கனடா அங்கம் வகிக்கும், ‘பைவ் அய்ஸ் உளவு கூட்டணி’ வாயிலாகவும் உளவு தகவல்கள் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகின. இது, இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், பசிபிக் தீவு நாடான நியூசிலாந்தின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், அரசு முறைப் பயணமாக நம் நாட்டிற்கு வந்துள்ளார். புதுடில்லியில் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று முன்தினம் சந்தித்தார்.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் நேற்று அளித்த பேட்டி: கனடாவில் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக, எங்கள் நாட்டு அரசும் உளவு தகவல்களை பகிர்ந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்போது முந்தைய அரசு ஆட்சியில் இருந்தது. ஆனால், பைவ் அய்ஸ் நாடுகள் பகிர்ந்ததாக கூறப்படும் உளவுத் தகவல்களில், எவ்வித உண்மை தன்மையும் இல்லை.
அவ்வாறு இருப்பின், இவ்வழக்கின் தற்போதைய நிலை என்ன? இதுவரை இவ்வழக்கில் என்ன கண்டறியப்பட்டுள்ளது? இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை கனடா அரசு இதுவரை வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.