பா.ஜ., செய்த பணிகளை செய்ய காங்.,க்கு 20 ஆண்டுகள் ஆகும்

‛‛ வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ., அரசு செய்த பணிகளை செய்ய காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகள் எடுத்து இருக்கும்” என, உலகின் நீண்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் சேலா கணவாய் வழியாக தவாங் பகுதியை இணைக்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.825 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை, பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைத்த அவர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் முடிவடைந்த ரூ.55,600 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

 

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சியடைந்த வடகிழக்கு மாநிலங்கள் என்பது எங்களின் கொள்கை. நமது வடகிழக்கு மாநிலங்கள், தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா உடன் வர்த்தகம் மற்றும் வணிகம் செய்வதற்கான இணைப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு புறம் ‘ வளர்ச்சியடைந்த பாரதம் ‘ ஆக நாட்டை மாற்வும், இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும் இரவு பகலாக உழைத்து வருகிறேன். ஆனால் மறுபுறம், ‛ இண்டியா ‘ கூட்டணியில் உள்ள வாரிசு அரசியல்வாதிகள் என்னை விமர்சித்து வருகின்றனர். மோடிக்கு குடும்பம் உள்ளதா என கேட்கின்றனர். என்னை விமர்சிப்பவர்களின் கவனத்திற்கு, அருணாச்சல்லில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், நாங்கள் மோடியின் குடும்பம் என்கின்றனர். வட கிழக்கு மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த பணிகளை காங்கிரஸ் செய்ய 20 ஆண்டுகள் எடுத்து இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.