காஷ்மீர் இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஜம்மு-காஷ்மீரில் (7.3.24) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது நகரிலுள்ள பக் ஷி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியின்போது பிரதமரின் வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளியான நசீமுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர் மோடி, நசீமை தனது நண்பன் என்று அழைத்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தேனீ வளர்ப்புத் திட்டம் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்தும் நசீமின் வெற்றிகரமான வர்த்தகம் குறித்தும் பிரதமர் அதில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேடைக்கு பின்புறம் நசீமை, பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்து வரச் செய்து அவருடன் செல்பி எடுத்துள்ளார் பிரதமர். இதுதொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் வலைதளம் மூலம் கூறும்போது, எனது நண்பர் நசீமுடன் நினைவில் நிற்கக்கூடிய செல்பி புகைப்படம் எடுத்தேன். அவருடைய திறன்வாய்ந்த பணியில் நான் கவர்ந்து இழுக்கப்பட்டேன்.

நாம் பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நண்பர் நசீம் தேனீ வளர்ப்பு மூலம் இனிப்புப் புரட்சியைக் கொண்டு வந்துள்ளார்” என்றார். நசீம் கூறும்போது, “தேனீ வளர்ப்புத் திட்டத்துக்காக அரசிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி தொழிலைவிரிவுபடுத்தினேன். முன்பு ஒருநாளைக்கு 2 பெட்டிகள் விற்பனையாயின. இது தற்போது 200 பெட்டிகளாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தேனீ வளர்ப்புத் தொழிலில் அதிக அளவில் வருமானம் ஈட்டி வருகிறேன்” என்றார்.