மேற்கூரை சோலார் திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சேரும் வசதி: அஞ்சல் துறை அறிமுகம்

மத்திய அரசு அறிவித்துள்ள மானியத்துடன் கூடிய மேற்கூரை சோலார் திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள், தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்யும் முறையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ‘பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ என்ற மேற்கூரை சோலார் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு மேற்கூரை சோலார் பேனல்களை நிறுவவும், சூரிய சக்தியை மின்சாரத்துக்குப் பயன்படுத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.
வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் வீட்டின் மின்சார செலவைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேற்கூரை சோலார் திட்டத்தின் மூலம் ஒரு கோடி வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். அத்துடன், சோலார் பேனல்களின் விலையில் 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள் தபால் துறை மூலமாக வீட்டில் இருந்தபடியே பதிவு செய்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை வடகோட்டஅஞ்சல் துறையின் சார்பில் தபால்காரர்கள் வீட்டுக்கே வந்து பதிவு செய்து தருவார்கள். மின் இணைப்பு வாடிக்கையாளர் எண், கடைசி 6 மாதத்துக்குள் கட்டப்பட்ட ஏதேனும் ஒருமின்ரசீதின் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தங்களது பகுதி தபால்காரர் மூலம் இத்திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய 044-28273635 என்றதொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று சென்னை வடகோட்டம், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் (அஞ்சல்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.