டெல்லியில் பாரத் டெக்ஸ் என்ற சர்வதேச கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ஜவுளித் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2024‘ என்ற பெயரில் சர்வதேச கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜவுளித் துறையில் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய ஜவுளி உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை இணைக்கும் பாலமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான தளமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வரும் 29-ம் தேதி வரை… வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளன. இதில் ஜவுளித் துறை வளர்ச்சி தொடர்பான கருத்துகள் எடுத்துரைக்கப்பட உள்ளன. இந்த நிகழ்வில் சர்வதேச நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், 3,500 நிறுவனங்கள், 100 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வர்த்தகர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகளில் (100-வது சுதந்திர தினம்) இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற தீர்மானித்துள்ளோம். வளர்ந்த இந்தியா லட்சியத்தை அடைவதற்கான 4 முக்கியமான தூண்களாக ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் இருப்பார்கள். இந்த தூண்களுடன் நம் நாட்டின் ஜவுளித் துறையும் இணைக்கப்படும். எனவே, பாரத் டெக்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமானது ஆகும்.
ரூ.12 லட்சம் கோடி மதிப்பு: நம் நாட்டின் ஜவுளித் துறையின் சந்தை மதிப்பு கடந்த 2014-ம் ஆண்டில் ரூ.7 லட்சம் கோடியாக இருந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு இத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பலனாக இத்துறையின் சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தி 25% அதிகரித்துள்ளது. அதேநேரம், ஜவுளித் துறையின் தரக் கட்டுப்பாட்டிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு இத்துறை சார்ந்தவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.