புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை: சிபிஎஸ்இ திட்டம்

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது.

அக்குழுவின் பரிந்துரைகளின்படி, கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியான தகவலின்படி, வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வை, 9 மற்றும் 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் கணிதம், அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களை சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வெழுத சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.