உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேசத்தின் 60 மாவட்டங்களில் இந்த 14 ஆயிரம் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம் 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சம்பல் மாவட்டத்தில் அமைய உள்ள உலகின் முதல் கல்கி கோயிலான ‘கல்கி தாம்’ புனித தலத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஸ்ரீகல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று சத்ரபதி சிவாஜி பிறந்த நாள். இது புனிதமான, ஊக்கமளிக்கும் நாளாக அமைந்துள்ளது. தோல்வியில் இருந்தும் வெற்றியை மீட்டெடுக்கும் நாடு இந்தியா. பல நூறு ஆண்டுகளாக நாம் தாக்கப்பட்டோம். வேறு எந்த நாடு, எந்த சமுதாயமாக இருந்தாலும், இதுபோல தொடர்ந்து தாக்கப்பட்டால் அழிந்து போயிருக்கும். உலகில் இருந்தே காணாமல் போயிருக்கும். ஆனாலும், நாம் உறுதியாக நின்றது மட்டுமின்றி மேலும் வலுவாகவும் உருவெடுத்து வந்துள்ளோம்.
இன்றைய இந்தியா ‘வளர்ச்சியுடன் பாரம்பரியம்’ என்ற மந்திரத்துடன் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. ஸ்ரீகல்கி தாம் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றது ஒரு பாக்கியம். விழாவுக்கு என்னை அழைத்த ஆச்சார்யா பிரமோத் ஜிக்கு மனமார்ந்த நன்றி. விழாவில் அவர் பேசும்போது, “பிரதமர் மோடிக்கு கொடுப்பதற்கு அனைவருக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது. ஆனால், என்னிடம் எதுவும் இல்லை. எனது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது” என்றார்.
நீங்கள் எனக்கு எதுவும் தராதது தான் நல்லது. ஏனென்றால், காலம் மாறிவிட்டது. இன்றைய கால கட்டத்தில், ஸ்ரீ கிருஷ்ணருக்கு அவரது நண்பர் சுதாமா சிறிது உணவு கொடுத்திருந்தால், அது உடனே வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி, பொதுநல மனு தாக்கல் செய்து விடுவார்கள். கிருஷ்ணர் ஊழல் செய்துவிட்டார் என்று தீர்ப்பும் வரும். எனவே, எனக்கு நீங்கள் எதையும் தராமல், உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தியதற்கு நன்றி.
நாட்டின் 500 ஆண்டுகால காத்திருப்பு கடந்த ஜனவரி 22-ம் தேதி முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமபிரானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பாலராமர் பிரசன்னமான அந்த அனுபவம், அந்த தெய்வீக உணர்வு, இன்னும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில். அரபு மண்ணான அபுதாபியில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்டதையும் பார்த்தோம்.
இந்த காலகட்டத்தில்தான் வாராணசியில் விஸ்வநாதர் கோயில் தழைத்தோங்குவதையும். வாராணசி நகரம் புத்துயிர் பெறுவதையும் காண்கிறோம். மத்திய பிரதேசத்தின் மகா காளேஸ்வர் கோயிலின் மகிமை, குஜராத்தில் சோமநாதர் ஆலய வளர்ச்சி, கேதார் பள்ளத்தாக்கின் மறு கட்டமைப்பு ஆகியவற்றையும் பார்க்கிறோம். வளர்ச்சி, பாரம்பரியத்தின் மந்திரத்தை நாம் உள்வாங்குகிறோம்.
இன்று, ஒருபுறம் நமது புனித தலங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன. மறுபுறம், நகரங்களில் ஹைடெக் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்படுகின்றன. புராதன பெருமையும், தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் வளர்ந்து வருகின்றன. நமது பழங்கால சிற்பங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. சாதனை படைக்கும் அளவில் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிகின்றன. இது நமது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும். இவ்வாறு பிரதமர் பேசினார்.