பீஹாரின் பாஹல்பூர் மாவட்டத்தில், எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, புத்த கல்வி அளித்து வந்த விக்கிரமசீலா பல்கலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன. கடந்த எட்டாம் நுாற்றாண்டில் பாலப் பேரரசர் தர்மபாலாவால் கட்டப்பட்டது, விக்கிரமசீலா பல்கலைக்கழகம்.
புத்த மதத்தை பரப்பும் நோக்கத்துடன், புத்தமத கல்வி வழங்குவதற்காக துவக்கப்பட்ட பல்கலைகளில் இதுவும் ஒன்று. நாளந்தா, ஓடாந்தபுரியைத் தொடர்ந்து, புத்தமத கல்வி வழங்குவதற்காக, பேரரசர் தர்மபாலாவால் இந்த பல்கலை கட்டப்பட்டது.
பின்னர், 13ம் நுாற்றாண்டில் படையெடுப்பில் இது அழிக்கப்பட்டது. தற்போதைய பீஹாரின் பாஹல்பூர் மாவட்டம் அன்திசாக் கிராமத்தில் இந்தப் பல்கலை அமைந்திருந்தது. இது தொடர்பாக, 1972 முதல் 1982 வரை தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில், பல்கலையின் பல முக்கிய கட்டடங்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும் அங்கு அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன. கடந்த 8ம் தேதி இந்த பணிகள் துவங்கின.
ஏற்கனவே அகழாய்வு பணிகள் நடந்த இடங்களில் மணல்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வில், பல்கலை குறித்து பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.