‛‛ உங்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் ” என இளம் வாக்காளர்கள் மத்தியில் பேசும் போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
1950 ஜன.,25 ல் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில், 2011ம் ஆண்டு முதல் ஜன.,25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது மோடி பேசியதாவது: இளம் வாக்காளர்களுடன் இருப்பது உற்சாகத்தை தருகிறது. ஜனநாயக நடைமுறையில், நீங்கள் முக்கியமான அங்கமாக மாறி உள்ளீர்கள். அடுத்த 25 ஆண்டுகளில், நாடு மற்றும் உங்களின் எதிர்காலத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். உங்களின் ஓட்டு எதிர்கால இந்தியாவையும், நாட்டின் பாதையையும் நிர்மாணிக்கும் சக்தி பெற்றவை.
நாட்டின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் போது, அரசு எடுக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். நிலையான அரசு பெரிய முடிவுகளை எடுக்கும். பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை பா.ஜ., அரசு தீர்த்து வைத்தது. உலக தலைவர்களை சந்திக்கும் போது, நான் மட்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதாக கருதவில்லை. 140 கோடி மக்களும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன். இன்று, இந்திய பாஸ்போர்ட் உலகம் முழுவதும் பெருமையுடன் பார்க்கப்படுகிறது.
கடந்த 10- 12 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. முன்பு ஊழல், முறைகேடுகள் தலைப்புச் செய்திகளாக வந்தன. ஆனால், இன்று வெற்றிக்கதைகள் குறித்து பேசப்படுகிறது. உங்களின் கனவே எனது லட்சியம். இது மோடியின் வாக்குறுதி. இவ்வாறு மோடி பேசினார்.