எத்தனாலுக்காக கூடுதல் சர்க்கரை ஒதுக்க அனுமதி கோரும் ஆலைகள்

எத்தனால் உற்பத்திக்காக, கூடுதலாக 10 முதல் 12 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஐ.எஸ்.எம்.ஏ., மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.எஸ்.எம்.ஏ., எனப்படும், இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துஉள்ளதாவது: மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக, சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 பருவத்தில், எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை வழங்க 17 லட்சம் டன் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பருவத்தில், ஜனவரி 15ம் தேதி வரை சர்க்கரை ஆலைகள் 149.52 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்துஉள்ளன. இது முந்தைய ஆண்டின் 157.87 லட்சம் டன்னில் இருந்து 5.28 சதவீதம் குறைவாகும். இருப்பினும், கரும்பு உற்பத்திக்கு சாதகமான வானிலை நிலவுவதால், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற முக்கிய மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுஉள்ளனர்.

இதையடுத்து, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதனால், எத்தனால் உற்பத்திக்கு கூடுதலாக அரசு 10 முதல் 12 லட்சம் டன் சர்க்கரையை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என, சங்கத்தின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், எத்தனால் உற்பத்திக்கு போக, அடுத்த பருவத்தில் ஓரிரு மாதங்கள் வரை சர்க்கரை இருப்பு போதுமானதாக இருக்கும்.

மேலும், நடப்பு பருவத்தில் கரும்புசாறு, பி ஹெவி வெல்லபாகு ஆகியவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கான கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு ஐ.எஸ்.எம்.ஏ., தெரிவித்துள்ளது.