கிழக்கு லடாக்கில் சீன எல்லைப்பகுதியில் எந்தவித சவாலையும் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியுள்ளார்.
ராணுவத்தின் தயார்நிலை குறித்து ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும், சீனாவும் ராணுவ அளவிலும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சீன எல்லைப் பகுதியில் பாதுகாப்பு சவால்களை சந்திக்க இந்திய ராணுவம் போதிய வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத ஊடுருவல் முயற்சிகள் நடந்தாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால், ராஜோரி -பூஞ்ச் பகுதியில் மட்டும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. ராஜோரி-பூஞ்ச் பகுதியில் தீவிரவாதத்தை அதிகரிக்க பாகிஸ்தான் ராணுவம் முயற்சிக்கிறது.
சீனா-பூடான் எல்லை பிரச்சினையை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. பூடானுடன் இந்தியா தனிச்சிறப்பான இருதரப்பு உறவை கொண்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான கவலைகளை இந்தியாவும், பூடானும் பகிர்ந்து கொள்கின்றன. பூடான்-சீனா இடையேயான ராணுவ பேச்சுவார்த்தைகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். பூடான் மக்கள் சிலர் மிசோரம் மற்றும் மணிப்பூரில் அடைக்கலம் கேட்கின்றனர்.
இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியையும் இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள பிரச்சினை காரணமாக சில தீவிரவாத குழுக்கள் மணிப்பூரில் நுழைய முயற்சிக்கின்றன. அதனால் மியான்மர் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் 20 அசாம் ரைபிள்ஸ்படையினர் உள்ளனர்.
ராணுவத்தில் அக்னி வீரர்களின்இணைப்பு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்திய ராணுவத்தில் தொழில் நுட்பம்அதிகமாக சேர்க்கப்படும். இந்திய தனியார் நிறுவனங்களுடன் ரூ.12,000 கோடி மதிப்பில் இலகுரக பீரங்கி வாகனம், எதிர்காலதேவைக்கான கவச வாகனம் உட்பட ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய எல்லைப் பகுதிகளில் பலவித பிரச்சினைகள் இருந்தாலும், அவற்றை திறம்பட சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு மனோஜ் பாண்டே கூறினார்.