மாலத்தீவுகள் அமைச்சர்களின் வாய்கொழுப்பு விவகாரத்தால், அந்நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை, சில ‘ஆன்லைன்’ நிறுவனங்கள் நிறுத்தியதை தொடர்ந்து, மாலத்தீவு சுற்றுலா அமைப்பு பீதி அடைந்துள்ளது. டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவங்கும்படி சமரச பேச்சில் இறங்கியுள்ளது.
தெற்காசிய நாடான மாலத்தீவுகள் அதிபராக, மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு சமீபத்தில் பொறுப்பேற்றார். சீன ஆதரவாளரான இவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் துவங்கினார்.
நம் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் லட்சத்தீவுகளுக்கு சென்று, அது பற்றி தன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளை கேலி, கிண்டல் செய்ததுடன், நம் நாட்டு சுற்றுலாவை இழிவுபடுத்தும் விதமாக, மாலத்தீவுகளின் மூன்று இணை அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.
இது, நம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாலத்தீவு சுற்றுலா புறக்கணிப்பு ஒரு இயக்கமாகவே வலுப்பெற்று வருகிறது. இது, மாலத்தீவுகள் சுற்றுலாத்துறைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும், ‘ஈஸ் மை டிரிப்’ என்ற இணையதளம், மாலத்தீவுகள் விமான டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. லட்சத்தீவுகளுக்கான விமான டிக்கெட் முன்பதிவுக்கு முக்கியத்துவம் தர துவங்கியது. இதை தொடர்ந்து, மாலத்தீவுகளின் பிரதான சுற்றுலா அமைப்பான, ‘மாடாடோ’ எனப்படும், மாலத்தீவுகள் சுற்றுலா மற்றும் பயண ஆப்பரேட்டர்கள் சங்கம், ஈஸ் மை டிரிப் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிஷாந்த் பித்திக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.
அதன் விபரம்: எங்கள் நாட்டின் இணை அமைச்சர்களின் வருந்தத்தக்க விமர்சனங்களை புறக்கணிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அவை, மாலத்தீவு மக்களின் பொதுவான கருத்து அல்ல. சுற்றுலாத்துறை தான் மாலத்தீவுகளின் உயிர்நாடி. நாட்டின் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுலா வாயிலாகவே கிடைக்கிறது. இதை நம்பி 44,000 பேர் உள்ளனர்.
சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கம், எங்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய சுற்றுலா பயணியரை நம்பியே மாலத்தீவு சுற்றுலாத்துறை இயங்கி வருகிறது. எனவே, எங்கள் நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு, மாலத்தீவுகள் சுற்றுலா சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்திய சுற்றுலா பயணியரின் வருகையை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளது.