பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்து தெரிவித்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அந்நாட்டு தூதரை நேற்று அழைத்து கண்டனம் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர்சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அத்துடன் “சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர்பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலா தலமாகமாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்கு பதில் உள்நாட்டில் உள்ள மாற்று இடங்களை பரிசீலிக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் ஏற்கெனவே மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் விமான டிக்கெட் மற்றும் ஓட்டல் அறை முன்பதிவுகளை ரத்து செய்தனர்.
இதையடுத்து, “வெளிநாட்டு தலைவர்கள் மீது அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து” என மாலத்தீவு அரசு சார்பில் நேற்று முன்தினம் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் 3 மாலத்தீவு அமைச்சர்களின் பதவியும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷாஹீபுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது. இதன்பேரில் நேரில் ஆஜரான ஷாஹீபிடம், பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, மாலியில் உள்ள இந்திய தூதர் முனு மஹாவருக்கு மாலத்தீவு அரசு சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
லட்சத்தீவு தொடர்பான தேடல் 34 மடங்கு உயர்வு: இணையவழியில் சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தரும் நிறுவனமான மேக்மை டிரிப், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்குப் பிறகு, லட்சத்தீவு தொடர்பான தேடல் 34 மடங்கு (3400%) அதிகரித்திருக்கிறது. இந்திய கடற்கரைகள் மீதான இந்தியர்களின் ஆர்வம், ‘பீச் ஆப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை தொடங்க எங்களை ஊக்குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மிக அழகான கடற்கரைகள் பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்படும். மேலும் அவற்றை சுற்றிப் பார்க்க விரும்புவோருக்கு பல சலுகைகள் மற்றும் கட்டண தள்ளுபடி வழங்கப்படும்” என பதிவிட்டுள்ளது