சென்னை வேளச்சேரி பகுதியில் 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் வேதனையில் தவித்து வரும் நிலையில், ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் உதயநிதியிடம் பள்ளி ஆசிரியை சராமாரியாக கேள்வி எழுப்பியதும், உடன் இருந்த அமைச்சர்கள் நடந்து கொண்டதும் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயலால் பெய்த அதி கனமழையால் வேளச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கைவேலி, மடிப்பாக்கம் ராம்நகர், புழுதிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த3 நாட்களாக மழைநீர் 4 அடிக்கு மேல் தேங்கியுள்ளது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஒருசிலர் தீவிரமாக முயற்சி செய்து வெளியே வந்து உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று வேளச்சேரி பகுதியில்பாதிப்புகளை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் வந்தனர். அப்போது பள்ளி ஆசிரியை ஒருவர், மழைநீர் தேங்குவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும் உதயநிதியிடம் மனு கொடுக்க முயன்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் உதயநிதியிடம் நெருங்கவிடாமல் அந்த பெண்மணியை பின்பக்கமாக இழுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் இழுத்தவர்களின் கைகளை உதறிவிட்டு, ‘வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்’. எப்படி இழுத்து தள்ளுகிறார்கள் பாருங்கள். நான் ஒரு பள்ளி ஆசிரியை.இங்கே மழைநீரில் தவித்துக் கொண்டிருக்கிறேன். இப்படிதான் ஒரு பெண்ணை நடத்துவீர்களா என்று சராமரியாக உதயநிதியை பார்த்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, “தண்ணீர் நிற்கிறது. 20 ஆண்டுகளாக நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்” என்றார். மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற சொல்கிறேன் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஒரு செகண்ட் சார் இருங்கசார், ஒரு செகண்ட் சார், பிளீஸ் சார் என்று ஆசிரியை சொன்னபோது, அவ்வளவு நேரம் எல்லாம் இருக்க முடியாது என்றபடி அந்த பெண்ணை தள்ளிவிட்டபடி உதயநிதியை அழைத்து சென்றார் கே.என்.நேரு. மூத்த அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்ப்பவர்கள் அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல், ‘வாட் நான்சென்ஸ் இஸ் திஸ் டிஎம்கே’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
மேலும் நாராயணபுரம் ஏரி நீர் வெளியேற்றத்தால் துரைப்பாக்கம் – பல்லாவரம்ரேடியல் சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, வேளச்சேரி – மடிப்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.