கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்குத் தொடர்பான மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி ஓய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஹிண்டன்பர்க் அறிக்கையை முழுமுற்றான உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் செபியின் விசாரணையை சந்தேகிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்து, தீர்ப்பை ஒத்திவைத்தது. இதையடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர் உயர்வைக் கண்டு வருகின்றன.
நேற்றைய தினம் அதானி குழுமநிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடி ஏற்றம் கண்டது. அதானியின் சொத்து மதிப்பு 53.8 பில்லியன் டாலராக(ரூ.4.46 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் அதானி 19-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதானி, உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தார். ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதையடுத்து அவரதுசொத்து மதிப்பு கடும் சரிவைச்சந்தித்தது. இதனால், பட்டியலில் 25-ம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். தற்போது அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்து வருகிற நிலையில், பட்டியலில் முன்னகர்ந்து வருகிறார்.