பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் கடந்த 1802-ம் ஆண்டு ‘லெஜியன் ஆப் ஹானர்’ என்ற பெயரில் ஒரு விருதை தோற்றுவித்தார். பிரான்ஸ் நாட்டுக்காக மிகச்சிறந்த சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அந்நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் இது வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மனித விண்கலம் திட்டத்தின் (ககன்யான்) முன்னாள் இயக்குநர் வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தீரி மத்தாவ், லலிதாம்பிகாவிடம் இந்த விருதை வழங்கினார்.
பிரான்ஸ், இந்தியா இடையிலான விண்வெளி துறை தொடர்பான கூட்டு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 2018-ல் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்காக, பிரான்ஸ் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். இந்த திட்டம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.