மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பெரிய பொக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராகவன்-பாண்டியம்மாள் தம்பதி. இரு தினங்களுக்கு முன் வேலைக்குச் சென்ற இருவரும், மதியம் வீடு திரும்பினர். அப்போது, வீட்டில் பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சிந்துப்பட்டி போலீஸார் விசாரித்தனர்.
இதற்கிடையே, திருட்டு காரணமாக ஊருக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், ஊர் வழக்கப்படி அனைத்து வீடுகளுக்கும் காகித கவர் கொடுக்கப்பட்டது. நகைகளை யாராவது திருடி இருந்தால் அந்தக் கவரில் வைத்து, ஊர் மத்தியில் வைக்கப்பட்டுள்ள அண்டாவில் போட்டுவிடலாம் என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கிராம பள்ளிக்கூடத்தில் இரவு 2 அண்டாக்கள் வைக்கப்பட்டு, மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பார்த்தபோது, அண்டாவில் கிடந்த ஏராளமானகவர்களில், ஒரு கவரில் மட்டும் 23 பவுன் நகைகள் இருந்தன.
எஞ்சிய 3 பவுன் மற்றும் பணத்தை மீட்க மீண்டும் கவர்கள் வழங்கப்பட்டு, அண்டா வைக்கப்பட்டது. அதில், 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் போடப்பட்டிருந்தது. பின்னர், நகைகள், பணத்தை போலீஸார் முன்னிலையில் ராகவனிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். பெரும்பாலும் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் எதுவும்நடப்பதில்லை. ஏதாவது திருட்டு நடந்தால், ஊர் வழக்கப்படி தண்டோரா போட்டு, பொருட்களை மீட்டுத் தருவோம். இது தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கவில்லை” என்றனர்.