இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதிலும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதிலும் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 45 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது.
கடந்த மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட போது, அந்நாட்டைச் சேர்ந்த 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்கள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் கூறி வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே, கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இது தொடர்பாக நடந்த பேச்சின் போது, காசாவில் நான்கு நாட்களுக்கு போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட, 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஒப்புக் கொண்டது.
மேலும், 10 பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பு விடுவித்தால், கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியது. பிணைக் கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் அரசு விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. நேற்று காலை 10:00 மணிக்கு இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக இருந்தது.
ஆனால், இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாச்சி ஹாங்பி, ”இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வர சற்று தாமதம் ஏற்படும்,” என, நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார். இந்த கடைசி நிமிட பேச்சு, போர் நிறுத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில இறுதி முடிவுகள் குறித்து தெளிவு ஏற்பட்டதும், இன்று காலை முதல் ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
”இந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் போர் மீண்டும் தொடரும். 240 பிணைக் கைதிகளை மீட்டு, ஹமாஸ் படைகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம்,” என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.