தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் போலீஸார், போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்கும் நடவடிக்கையிலும், போதைப் பொருளினால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போதைப் பொருள்கள் தொடர்ந்து கடத்தி வருபவர்கள், பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
அதோடு அவர்களது பெயரிலும், பினாமி பெயர்களிலும் வாங்கி குவித்துள்ள சொத்துக்களை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் தமிழகம் முழுவதும் கடந்த 2 முதல் 20-ம் தேதி வரையில் 15 நாட்கள் போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தனர். இதில் மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 783 கிலோ கஞ்சா, 10 கிராம் கொக்கைன், 85 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என அப் பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.