தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு, கடல்சார் மக்கள் நல சங்கமம் இணைந்து நேற்று, துாத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அடுத்துள்ள தனியார் அரங்கில், உலக மீனவர் தின விழாவை நடத்தின. விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கேடயம், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு விருதுகள், மீனவர்கள் குழந்தைகளுக்கு செயற்பாட்டாளர் விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தார். பின், மீனவ சங்க நிர்வாகிகள், கோரிக்கைகளை கவர்னரிடம் எடுத்துரைத்தனர். கவர்னர் ரவி பேசியதாவது:
செப்., 21ம் தேதி மீனவ சங்க பிரதிநிதிகள் ராஜ்பவனில் என்னை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மீனவர் தின விழாவிற்கு துாத்துக்குடி வர வேண்டும் என, அழைப்பு விடுத்தனர். உடனடியாக சம்மதம் தெரிவித்தேன். மீனவர்கள் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரிவித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தினேன்.
மீனவர்கள் தேசத்தின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும், பொருளாதார உயர்வுக்கும் மிகவும் உறுதுணையாக உள்ளனர். கடலை பாதுகாக்க மீனவர்களை தவிர வேறு யாராலும் முடியாது என்பதால், கடலோர காவல் படையில் மீனவர்களின் பங்கு மிக அதிகமாக இருக்க வேண்டும். தேசம் வளரும் போது, மீனவ மக்களின் பங்களிப்பு கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி மீனவ சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மீனவர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றி வைக்கப்படும். இவ்வாறு கவர்னர் பேசினார்.