ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதியோடு முடிந்துள்ள நிலையில், மக்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணத்தை மாற்றிக்கொள்கின்றனர்.
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பணத்தை மாற்றித் தருவதற்கு முகவர்கள் கமிஷன் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளன. இதையடுத்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் ரிசர்வ் வங்கியின் பணப்பரிமாற்ற கவுன்டருக்கு விரைந்து, அங்கு பணம் மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பொதுமக்களா அல்லது முகவர்களாக என்று சோதனை நடத்தினர். இந்நிலையில், மக்கள் ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் மூலம் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி மாற்றிக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் ரோஹித் தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், மக்களுக்கு பயண அலைச்சலும் செலவும் மிச்சமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் வங்கியில் சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ள 2023 செப்டம்பர் 30-ம்தேதி வரை அவகாசம் வழங்கியது. அதன் பிறகு ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. பின்னர் அந்தக் காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அக்டோபர் 8-ம் தேதி முதல் வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளை பெறாது என்றும் தேவைப்படுவோர் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி மாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலக முகவரிக்கு மக்கள் தங்கள் வசமுள்ள ரூ.2,000 நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பினால், அவர்களின் வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.