”கேரளாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், முதல்வர் பினராயி விஜயன் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது,” என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா குற்றம் சாட்டிஉள்ளார். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இந்த அரசுக்கு எதிராக, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன், நேற்று பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது. இதில், அக்கட்சி தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:
கேரளாவில் சமீபத்தில் நடந்த பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பேரணியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால் பேசினார். இதை கண்டிக்காத முதல்வர் பினராயி விஜயன் அரசு, அவர் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவுக்கு, இடது ஜனநாயக முன்னணி அரசு கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், இந்த அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது.
இதனால் அமைதியான மாநிலத்தில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. முதல்வர் பினராயி விஜயனின் திறனற்ற நிர்வாகத்தால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இந்த அரசுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.