ரூ.60ல் பெங்களூரு மெட்ரோ ரயில் பயணம்

செல்லகட்டா இடையே மெட்ரோ ரயில் சேவை நேற்று அமலுக்கு வந்தது. 44 கி.மீ., துாரத்தை, 60 ரூபாய் செலவில், 80 நிமிடங்களில் கடப்பதால், பயணியர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. பெங்களூரில் ஏற்கனவே பையப்பனஹள்ளியில் இருந்து கெங்கேரி வரையிலும்; கே.ஆர்.புரம் முதல் ஒயீட்பீல்டு வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் பாதையை கெங்கேரியில் இருந்து செல்லகட்டா வரை, 2.05 கி.மீ., மற்றும் பையப்பனஹள்ளியில் இருந்து கே.ஆர்.புரம் வரை, 2.10 கி.மீ., துரத்துக்கு நீட்டிக்கும் பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்து, ஒரு மாதத்துக்கும் மேலானது. ஆனால், காங்., – வி.ஐ.பி.,க்கள் துவக்கி வைப்பதற்காக ரயில்கள் சேவை துவங்குவதில் தாமதம் நிலவியது.

பெங்களூரின் மூன்று பா.ஜ., – எம்.பி.,க்களும், பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு, மெட்ரோ ரயில் சேவையை துவக்க உத்தரவிடும்படி கேட்டு கொண்டனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி உத்தரவின்படி, பையப்பனஹள்ளி – கே.ஆர்.புரம்; கெங்கேரி – செல்லகட்டா இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்குவதாக நேற்று முன்தினம் இரவு, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.இதன்படி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஒயிட்பீல்டில் இருந்தும், செல்லகட்டாவில் இருந்தும் முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது. இதையடுத்து, ஒயிட்பீல்டு – செல்லகட்டா இடையே, 37 ரயில் நிலையங்கள் கொண்ட 43.49 கி.மீ., நீளமான மெட்ரோ ரயில் சேவை முழுதும் பயன்பாட்டுக்கு வந்தது.

வழக்கமாக, ஒயிட்பீல்டில் இருந்து செல்லகட்டாவுக்கு டாக்சியில், 1,000 ரூபாயும்; ஆட்டோவில், 600 ரூபாய் வரையும் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. பி.எம்.டி.சி., பஸ்களில் செல்ல, குறைந்தபட்சம் மூன்று பஸ்களாவது மாற வேண்டும். இதே மெட்ரோ ரயிலில் மொத்த துாரத்தை, வெறும் 80 நிமிடங்களில் கடக்கலாம். அதுவும் வெறும் 60 ரூபாயில் என்பது தான் சிறப்பு.