வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
மேற்கு வங்க வா்த்தகம், தொழில் சம்மேளனம் சாா்பில் இந்திய-பசிபிக் பொருளாதார கருத்தரங்கம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் பங்கேற்றுப் பேசியதாவது:
இந்தியா 2021-22ஆம் ஆண்டில் 9.1 சதவீதமும், 2022-23ஆம் ஆண்டில் 7.2 சதவீதமும் பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்தது. நடப்பு நிதியாண்டு மற்றும் 2030 வரையிலான ஆண்டுகளில் சராசரி பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
உலகப் பொருளாதார நிலவரத்தை கொண்டுதான், நான் 7.5-8 சதவீத வளா்ச்சி குறித்து பேசாமல், 6.5 சதவீத வளா்ச்சி குறித்து பேசுகிறேன்.
இதுபோன்ற சூழலில், இந்தியா தன்னை உலக விநியோகச் சங்கிலியில் வலுவாக பிணைத்துக் கொண்டு, சீனாவை தவிா்க்கும் மேற்கத்திய நிறுவனங்களின் வியூகத்துக்கு ஏற்ப ஈா்ப்புடையதாக மாற வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2014-ஆம் ஆண்டில் உலக அளவில் பெரிய பொருளாதாரங்களில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.
உலகப் பொருளாதாரமானது, நிச்சயமற்ற காலகட்டத்தை கடந்து செல்லவிருக்கிறது. உலகமயமாக்கல் உச்சகட்டத்தில் இருந்த 2003-2008 காலகட்டத்தில், வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தன. ஆனால், இப்போது வட்டி விகிதங்கள் உயா்ந்து வருகின்றன.
உலக பொருளாதாரத்தின் யதாா்த்தம் இவ்வாறு உள்ள நிலையில், உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம். உலகளாவிய பதற்றங்களையும் தாங்கும் வகையில் நமது விநியோக சங்கிலியை வலுவாக கட்டமைக்க வேண்டும்.
தற்போதைய பூகோள-அரசியல் நிகழ்வுகளால், இந்தியாவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள வாய்ப்பை விரைவாகவும் திறமையாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.