அறிவியல் உலகில் இந்தியாவை தலை நிமிர செய்த சந்திரயான்-3

சந்திரனில் தரையிறங்கி ஆராய்வதற்காக, ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ‘சந்திரயான் – 3’ விண்கலத்தை செலுத்தியது. இதன், ‘விக்ரம் லேண்டர்’ ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6:04 மணியளவில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
லேண்டர் சாதனத்தில் இருந்த ‘பிரக்ஞான் ரோவர்’ சாதனமும் வெற்றிகரமாக நிலவில் இறங்கி, ஆய்வுகளை மேற்கொண்டது. அறிவியல் உலகில், ‘சந்திரயான் – 3’ வெற்றி மிகப்பெரிய உச்சத்திற்கு நம் நாட்டை உயர்த்தி உள்ளது என்றால் அது மிகையில்லை. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளில், அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் என்ற தமிழரும் ஒருவர்.

நிலவின் தென்துருவத்தில் விண்கலம் தரையிறங்குவதில் உள்ள தனித்துவமான சவால்கள் என்ன?

 

நிலவின் தென்துருவத்துக்கு இதுவரை எந்த நாடும் செல்லவில்லை. ‘சந்திரயான் – 2’ தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன. அதற்கு விடை கண்டதால், ‘சந்திரயான் – 3’ விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்குவதற்கான, கடைசி, 19 நிமிடங்கள் முக்கியமானதாக முடிவு செய்யப்பட்டது. வளிமண்டலம் இல்லாத காரணத்தால், நிலவில் பாராசூட் பயன்படுத்த முடியாது. எனவே, வேகத்தை பூஜ்யத்துக்கு குறைத்து, ‘புரபல்சன்’ என்ற சாதனம் மூலம் உந்து சக்தி கொடுத்து, கீழே விழும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.  எப்படி எல்லாம் தோல்விகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்றவாறு தான், சாப்ட்வேர், ஹார்டுவேர், செயற்கை நுண்ணறிவு ஆகியவை உருவாக்கப்பட்டன. முதலில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்குவது தான் சவாலாக இருந்தது. கீழே விழுந்து நொறுங்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். உறைந்த நிலையில் நீர் உள்ளதாக சொல்லப்பட்டதால், ஆய்வுக்காக தென்துருவம் தேர்வு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் மனிதன் குடியேறி ஆய்வு செய்வதற்காக, நிலவில் விண்வெளி மையம் அமைத்து, அங்கிருந்து மற்ற கோள்களுக்கு செல்வது சாத்தியமா என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக தென்துருவ ஆய்வு முக்கியமானதாக இருக்கிறது.

‘சந்திரயான் – 3’ ரோவருக்கு என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன?

 

லேண்டர் தரையிறங்கிய பின், உள்ளிருந்து ரோவர் தானாக பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. இரண்டு சாதனங்கள் பொருத்தப்பட்டன. ‘ஆல்பா பார்டிக்கல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ என்ற சாதனம், நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதி சேர்மங்கள், நுண்ணுயிர் சேர்மங்கள் ஆகியவை உருவாவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யும்.

‘லிப்ஸ்’ என்ற சாதனம், மக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு உள்ளிட்ட மூலக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும். ஆய்வு செய்த பின், லேண்டர் வாயிலாக பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

நிலவை பற்றிய நமது புரிதலுக்கு ‘சந்திரயான் – 3’ எவ்வாறு உதவும்?

 

லேண்டர், ரோவரில் நாம் முதன்முறையாக இணைத்து அனுப்பிய சாதனங்கள், நிலவை ஆய்வு செய்து நமக்கு பல தகவல்களை அனுப்பியுள்ளன. லேண்டரில் இருந்து, ரோவர் இறங்கியதும், அது நகர்ந்து, 5 மீட்டர் துாரம் சென்ற உடன், 10 செ.மீ., ஆழத்துக்கு துளையிட்டு, ஆய்வு செய்தது.

ரோவரில் 2 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. எதிரில் என்ன உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு வழித்தடத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் செய்யப்பட்டிருந்தன. அது அனுப்பிய பல தகவல்களை ஆராய்ந்து வருகிறோம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் எதிர்காலத்திற்கு ‘சந்திரயான் – 3’ திட்டம் எந்த வகையில் உதவும்?

நிலவில் இதுவரை மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கி ஆய்வு செய்துள்ளன. நான்காவது நாடாக இந்தியா வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு செய்துள்ளது. அதுவும் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல் நாடு இந்தியா. இந்த வெற்றி, அறிவியல் உலகில் இந்தியாவைத் தலை நிமிரச் செய்துள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்புவது உட்பட பல திட்டங்களுக்கு ‘சந்திரயான் – 3’ திட்ட செயல்பாடுகள் உதவியாக இருக்கும்.

ரோவரின் கண்டுபிடிப்புகள் எதிர்கால நிலவுப் பயணங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படும்?

 

நிலவின் மேற்பரப்பில் என்னன்ன கனிமங்கள் இருக்கின்றன. மண், பாறைகளில் என்னென்ன உள்ளன என்பது ஆராயப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளலாம் என்பதை திட்டமிட இது உதவும்.

சந்திரயான் -3 திட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

 

பெங்களூரின் பைலாலு என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஆன்டெனா மூலம் சந்திரயான் – 3 உடன் நம்மால் தொடர்பை ஏற்படுத்த முடிந்தது. இது மட்டும் போதாது என்பதால், தொலைத்தொடர்பு இணைப்புக்கு மட்டும் மூன்று சர்வதேச விண்வெளி மையங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. மீதி முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்.

பயணங்களில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?

 

இந்தத் திட்டத்தின் வெற்றியால் அனைவரது பார்வையும், கவனமும் அறிவியல் மீது திரும்பி உள்ளது. விண்கலம் செலுத்தியது முதல், லேண்டர் தரையிறங்கியது வரை பலரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

எனக்கும், இஸ்ரோ தலைவர் உட்பட மற்றவர்களுக்கும் நாடு முழுதும் இருந்து மாணவர்களின் பாராட்டு கடிதங்கள் வந்தன. இதை பார்த்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களுக்கு வருங்காலத்தில் இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கலாம். விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வர். புதிய தொழில்நுட்பங்களை அறிந்து முன்னோக்கிச் செல்லுங்கள். முழு ஈடுபாட்டுடன், விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்.

உங்கள் வேலையில் உங்களுக்கு பிடித்த அம்சங்கள் எவை?

 

விண்கலம் செலுத்தியது முதல், லேண்டர் தரையிறங்கியது வரை கண்காணித்து செயல்பட வைத்தது, என் பணி. இவை வெற்றிகரமாக செயல்பட்டது, எனக்கு நிறைவைத் தந்தது. இதற்காக, இஸ்ரோவின் அனைத்துப் பிரிவு விஞ்ஞானிகளுடன் மட்டுமின்றி, நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி மையங்களுடனும் தொடர்பில் இருந்தேன்.

உங்கள் வேலையில் நீங்கள் சந்தித்த மிகவும் மறக்க முடியாத தருணங்கள் என்ன?

 

நிலவில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கியது தான் மறக்க முடியாத தருணம். இஸ்ரோவால் இந்தியாவுக்கு இந்த அளவுக்கு பெயர் வந்தது மிகவும் மகிழ்ச்சி.

இத்தனை ஆண்டு காலமாக செய்யாத முயற்சிகள், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது எப்படி?

 

சந்திரயான் – 2ல் என்ன பிரச்னைகளை சந்தித்தோம் என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு சந்திரயான் – 3ல், தொழில்நுட்பங்களை மாற்றினோம். ஏதாவது ஒரு சாதனம் பணிபுரியவில்லை என்றாலும், இன்னொரு சாதனம் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். எங்கள் குழுவில் உள்ள 500க்கும் அதிகமான விஞ்ஞானிகள், சந்திரயான் வெற்றிக்காக கடினமாக உழைத்தனர்.

இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளில் பலர், அதாவது 90 சதவீதம் பேர் பொறியியல் பட்டதாரிகளாமே? நிஜமா? அறிவியல் படிக்காதவர்களால் எப்படி இது சாத்தியமாயிற்று?

பொறியாளர்களும் தேவை, அறிவியல் படித்தவர்களும் தேவை. செயற்கைக்கோள்கள் தயாரிப்பதற்கு பொறியாளர்கள் மட்டுமின்றி, மற்ற படிப்புகள் படித்தவர்களும் தேவைப்படுகின்றனர்.