சனாதன தர்மத்தை அவதூறாக பேசுவது இண்டியா கூட்டணியின் மறைமுக கொள்கை’

காங்கிரஸ் புதுடில்லி: ‘சனாதன தர்மத்தை எதிர்ப்பது, ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் ஓட்டு வங்கி அரசியலுக்கான மறைமுக கொள்கையாக உள்ளது. எனவே தான், தி.மு.க., தலைவர்களின் தொடர்ச்சியான விமர்சனத்தை கண்டிக்காமல் அவர்கள் மவுனம் காக்கின்றனர்’ என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

 

சனாதன தர்மம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி தரக்குறைவாக விமர்சித்தார். இவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க., – எம்.பி., ராஜா, அவர் பங்குக்கு சனாதன தர்மம் குறித்து மோசமான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

 

தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனும், கர்நாடக எம்.எல்.ஏ.,வுமான பிரியங்க் கார்கே மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த காங்., அமைச்சர் உள்ளிட்டோர் இவர்களது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

இது குறித்து, ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என, பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது: ஹிந்துக்கள் இடையே ஜாதி பாகுபாடுகளை சனாதன தர்மம் ஊக்குவிப்பதாக தி.மு.க., தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

 

ஷபீர், கேவாட் மற்றும் துறவி ரவிதாஸ் போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மரியாதைக்குரிய துறவிகளுக்கு பிரத்யேகமான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. ஜாதி மற்றும் சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒருவர் பக்தியுடன் கடவுளை அடைய முடியும் என்பதை தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது.

 

தி.மு.க., – ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட சில கட்சி தலைவர்கள் சனாதன தர்மத்தையும், ஹிந்து மதத்துடன் தொடர்புடைய புனித நுால்களையும் தொடர்ச்சியாக இழிவுபடுத்தி வருகின்றனர். பிற மத தலைவர்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் விமர்சிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளதா?

 

சனாதன தர்மம் குறித்து தி.மு.க., தலைவர்களின் விமர்சனம் பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா மவுனம் காத்து வருகிறார். சனாதன தர்மத்தை எதிர்ப்பது, ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் ஓட்டு வங்கி அரசியலுக்கான மறைமுக கொள்கை என்பது தெளிவாகிறது.

 

இல்லையெனில், தி.மு.க., தலைவர்களின் கருத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என, ‘இண்டியா’ கூட்டணியினர் தீர்மானம் கொண்டு வர வேண்டும். சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை இந்த நாடும், நாட்டு மக்களும் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.