தெலங்கானாவில் வசிக்கும் தகுதியான சிறுபான்மையினர் குடும்பத்தில் ஒருவருக்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.1 லட்சம் நிதி உதவி செய்வதாக தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகரராவ் அறிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசியதாவது: சிறுபான்மையினர் சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய வேண்டுமென்பதே இந்த அரசின் நோக்கம். ஆதலால், சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த, பாரசீக மதங்களை சேர்ந்த அனைத்து பிரிவினருக்கும் சிறுபான்மையினர் நல வாரியம் மூலம் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு 100 சதவீத மானியத்துடன் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. எங்களின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில், சிறுபான்மையினரின் வளர்ச்சிக்காக ரூ.8,581 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஷாதி முபாரக் திட்டத்தின் கீழ் ஒரு திருமணத்துக்கு ரூ.2,32,713 வீதம் ஏழை முஸ்லிம் பெண்கள் திருமணத்திற்கு ரூ.1,903 கோடி செலவு செய்யப்பட்டது. சிறுபான்மையினருக்காக 204 பள்ளி, 204 கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளுக்கு 5,862 ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளோம். சிஎம் அயல்நாட்டு கல்வி திட்டத்தின் கீழ் 2,701 மாணவ, மாணவியருக்கு ரூ. 435 கோடி செலவிட்டு, வெளிநாடுகளில் மேற்படிப்பு படிக்க அனுப்பி வைத்தோம். மேலும், 20 ஆயிரம் தையல் இயந்திரங்கள், 941 டாக்ஸிகள் வழங்கியுள்ளோம். தேவாலயங்கள் கட்டுவதற்கான விதிமுறைகளை சுலபமாக்கினோம். சீக்கியர்களுக்காக ஹைதராபாத்தில் குருத்வாரா கட்டுவதற்கு 3 ஏக்கர் அரசு நிலத்தை வழங்கினோம். ஜைனர்களுக்கும் சிறுபான்மையினர் வாரியங்களில் இடமளித்தோம். இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.