ஸ்டாலினுடன் பிரேமலதா பேச்சு; தி.மு.க., கூட்டணியில் சேர முயற்சி

டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க, தே.மு.தி.க.,வுக்கு அழைப்பு விடுவிக்காததால், அதிருப்தி அடைந்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினுடன், தொலைபேசியில் பேசியுள்ளார். இதனால், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம் பெற வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்பினார். ஆனால், தொகுதி பங்கீடு பேரம் சரிவர முடியாததால், கடைசி நேரத்தில், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. அக்கூட்டணி சில தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பிரித்ததால், தி.மு.க., ஆட்சி அமைக்க முடிந்தது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறைவு காரணமாக, அக்கட்சியின் வளர்ச்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்றாலும், ஒவ்வொரு தொகுதியிலும், சில ஆயிரம் ஓட்டுக்களை பெற்று வருகிறது. தே.மு.தி.க., ஓட்டுக்கள் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பயன்படுமே தவிர, லோக்சபா தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் முடிவு தெரியும் போது, தே.மு.தி.க., ஓட்டுக்களால் லாபம் இல்லை என, அ.தி.மு.க., கருதுகிறது. எனவே தான், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வை அ.தி.மு.க., – பா.ஜ., பொருட்படுத்தவில்லை. டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, தே.ஜ., கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கும், தே.மு.தி.க.,வை அழைக்கவில்லை. தே.மு.தி.க.,வை விட குறைவான ஓட்டு வங்கி வைத்துள்ள சிறிய கட்சிகளுக்கு கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியா கூட்டணி பெயர் சூட்டலுக்கு, பிரேமலதா வாழ்த்து தெரிவித்துஉள்ளார். இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.