இந்திய கடற்படையின் ‘பி75’ நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, எல் அண்டு டி., நிறுவனம், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ‘நவண்டியா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பீடு, 43,500 கோடி ரூபாயாகும். ‘பி75’ நீர்மூழ்கி கப்பல் திட்டம், இந்திய பாதுகாப்பு துறையிலே, அதிக மதிப்பிலான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், ஓர் இந்திய நிறுவனம், வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு, ஆறு நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படைக்கு தயாரித்து வழங்க வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்தியாவை சேர்ந்த எல் அண்டு டி., நிறுவனமும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நவண்டியா நிறுவனமும், கடந்த ஏப்ரலில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்ததை மேற்கொண்டன. அதன்படி, பி75 நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பை, நவண்டியா கப்பல் நிறுவனம் மேற்கொள்ளும். இதுகுறித்து, எல் அண்டு டி., நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: நவண்டியாவின் 3வது தலைமுறை ஏ.ஐ.பி., அமைப்பு, உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் திறமையான ஏ.ஐ.பி., அமைப்பாகும். ஏ.ஐ.பி., என்பது நீர்மூழ்கிக் கப்பல்கள், வளிமண்டல ஆக்ஸிஜனை அணுகாமல் செயல்பட உதவும் தொழில்நுட்பமாகும். இது பராமரிப்பதற்கு எளிதானது; மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இது பயோ எத்தனாலை ஹைட்ரஜனின் ஆதாரமாகப் பயன்படுத்துகிறது. பயோ எத்தனால் செலவு குறைந்ததாகவும், எளிதில் கிடைக்க கூடியதாகவும் உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.