பீஹார் சட்டசபையில் அமளி; தேஜஸ்வி ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.கடந்த 2004-–09 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, மும்பை, ஜபல்பூர், கோல்கட்டா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிபூர் ரயில்வே கோட்டத்தில் வேலை வாங்கி தருவதற்காக, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் குறைந்த விலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, மகள் மிசா பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. இந்நிலையில், வழக்கின் இரண்டாவது குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஏற்கனவே இடம் பெற்ற பெயர்களுடன், லாலுவின் மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி உட்பட 14 பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இது, பீஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘ஊழல்வாதிகளுடன் சமரசம் கிடையாது’ என, முதல்வர் நிதீஷ் குமார் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், அவரது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பல்வேறு ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில், பீஹார் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரரும், அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருடன், முதல்வர் நிதீஷ் குமார் சபைக்கு வந்தார். கூட்டணியில் குழப்பம் இல்லை என்பதை உணர்த்தவே அவர்களுடன் முதல்வர் சேர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சட்டசபை கூடியதும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வின் தலைமை கொறடா ஜனக் ராம் எழுந்து, ”ரயில்வே வேலைக்கு நிலங்களை லஞ்சமாக பெற்ற வழக்கில் துணை முதல்வர் தேஜஸ்வியின் பெயர், குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ”எனவே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினார். தேஜஸ்வி பதில் ஏதும் பேசாமல், அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அப்போது, உயிரிழந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன் பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது. சபைக்கு வெளியே, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய்குமார் சின்ஹா கூறியதாவது: இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதை கருத்தில் வைத்து, இந்த விவகாரத்தை நாங்கள் பெரிதாக்கவில்லை. ஆனால், வரும் நாட்களில் தேஜஸ்வியின் ராஜினாமாவை தொடர்ந்து வலியுறுத்துவோம். இது, ஊழலற்ற அரசு என்பதை நிரூபிக்கும்படி முதல்வருக்கு அழுத்தம் கொடுப்போம். ஊழல்வாதிகளுடன் முதல்வர் நிதீஷ் சமரசமாக செல்கிறார். தேஜஸ்வி ராஜினாமா செய்யவில்லை எனில், அவர் செய்த ஊழலுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தை இதோடு விட்டு விடமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.