கோவை ஒண்டிப்புதுாரில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில், திரிசக்தி யாகம் நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் தலைமை வகித்தார். இதில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், கலந்து கொண்டார். ஹிந்துக்களிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது. உலகின் எல்லா இடங்களிலும் கோவில்கள் உள்ளன. அவை நம் மதத்தின் சாரத்தை மக்களுக்கு உணர்த்துகின்றன என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள், வணிகம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்ற போது, அங்கு கோவில்களை கட்டினர். தமிழகத்தில் ராஜராஜசோழன், கடல் கடந்து சென்று கம்போடியாவில் கோவில் கட்டினார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது, ஹிந்து மதத்தின் தர்மம். ஹிந்து மதத்தில் உண்மை, துாய்மை, அன்பு, தவம் நான்கும் முக்கியமானது; இதை மேலும் வளர்க்க வேண்டும். யாரையும் வெற்றி கொள்ள நாம் போட்டியிடக் கூடாது.
ஹிந்து மதத்தின் கருத்துக்களையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லி, உற்றார், உறவினர் நண்பர்கள், மதம் மாறுவதை தடுக்க வேண்டும். மாற்றம் என்பது நம்மில் இருந்து துவங்க வேண்டும் என்றும் கூறினார். இதில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், கும்பகோணம் நாராயணி நிதி லிமிடெட் இயக்குனர் கார்த்திகேயன் பங்கேற்றனர். இங்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் எழுதிய கம்போடிய பயணம் புத்தகம் வெளியிடப்பட்டது.