கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் 2022-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய அமைச்சர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மங்களூருவில் நேற்று நடைபெற்ற மடாதிபதிகள், சாதுகள் மாநாட்டில் இந்த சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஒடியூர் மடாதிபதி குரு தேவானந்த சுவாமி கூறும்போது, ‘‘மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்வதை மடாதிபதிகள் ஏற்கவில்லை. அரசின் இந்த முடிவால் எங்களது மனம் புண்பட்டுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவை மடாதிபதிகள் அனைவரும் கூட்டாக சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்றார்.