மத்திய அமைச்சர்கள் தொடர் வருகை: கட்சி பணியில் பா.ஜ., சுறுசுறுப்பு

வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றிபெறும் வகையில், பா.ஜ.,வினர் புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இம்மாதம், 10ம் தேதி இரவு சென்னை வந்தார்.அவர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழிலதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அப்போது, பா.ஜ.,வின் ஒன்பது ஆண்டுகள் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மறுநாள் அவர், 11ம் தேதி சென்னை கோவிலம்பாக்கம், தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தென் சென்னை லோக்சபா தொகுதி பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அமித்ஷா, ‘பூத்’ கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு தெரிவித்தார்.பின், வேலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அமித் ஷாவை தொடர்ந்து, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, 18ம் தேதி சென்னை வந்தார். அவர், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பாலவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரனை ஆகிய இடங்களில் நடந்த கட்சி கூட்டங்களில் பங்கேற்று, தேர்தல் பணி தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நேற்று, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின், அவர், அண்ணாமலையிடம், ‘தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்காக பாராட்டுக்கள்.பா.ஜ., மேலிடம் அனைத்து உதவிகளையும் செய்யும்’ என்றார். இவ்வாறு, 10 நாட்களில் மூன்று மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பலர் வர உள்ளனர். இது, பா.ஜ., தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள், பூத் கமிட்டி அமைப்பது, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது என, கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.