ஸ்டான்லிக்கு அனுமதி கிடைக்குமா? என்.எம்.சி., அதிகாரிகள் மீண்டும் ஆய்வு!

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி அங்கீகாரம் தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அதிகாரிகள் நேற்று, மீண்டும் ஆய்வு செய்தனர். சென்னை ஸ்டான்லி, திருச்சி, தர்மபுரி ஆகிய மூன்று அரசு மருத்துவ கல்லுாரிகளின் இந்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறையை பின்பற்ற வில்லை; கல்லுாரி வளாகத்தில், ‘சிசிடிவி’ இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டில்லியில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில், அந்தந்த மருத்துவ கல்லுாரிகள் அறிக்கை சமர்ப்பித்தன. மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவினர், டில்லிக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆய்வு குழுவினர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்போது, ஏற்கெனவே குறிப்பிட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி கூறியதாவது:

தேசிய மருத்துவ ஆணையம் கூறிய சில குற்றச்சாட்டுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, என்.எம்.சி.,க்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, வழக்கமான ஆய்வுக்கு தான் என்.எம்.சி., குழுவினர் வந்துள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.எம்.சி., அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், விரைவில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.