ஒடிசா ரயில் விபத்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பட்நாயக் விளக்கம்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். ‘‘பாலசோர் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் 1,175 பேர் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 793 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளது’’ என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

மீட்பு, நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக ஒடிசா முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். ‘‘காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் ஒடிசா மருத்துவர்கள், செவிலியர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஒடிசா அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்’’ என்று பிரதமர் உறுதி அளித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.