கரூர் ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில், கடந்த மே26ல் வருமான வரித்துறை பெண் ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட நான்கு பேர் சோதனை நடத்த சென்றனர். அப்போது, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில், தி.மு.க.,வினர் பெண் ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை சரமாரியாக தாக்கினர். அப்போது, போலீசார் யாரும் சம்பவ இடத்தில் இல்லை. தனிப்பிரிவு போலீசார் மூலம் தகவலறிந்த, கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், அசோக்குமார் வீட்டிற்கு செல்லாமல், 200 அடி துாரம் தள்ளி ஜீப்பை நிறுத்தி விட்டு, அதில் ‘ஹாயாக’ அமர்ந்திருந்தார். அதை பயன்படுத்தி கொண்ட மேயர் கவிதா உள்ளிட்ட தி.மு.க.,வினர், பெண் ஆய்வாளர் காயத்ரியை, சூழ்ந்ததுகொண்டு அசோக்குமார் வீட்டில் இருந்து மிரட்டி வெளியே விரட்டியடித்தனர். பின், காரில் ஏறச் சென்ற ஆய்வாளர் காயத்ரியை சூழ்ந்து, கேரோ செய்து காரில் ஏற விடாமல் தடுத்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் விதுன்குமாரிடம், பெண் ஆய்வாளர் காயத்ரி நடந்த நிகழ்வுகளை சொல்லி கதறி அழுதார். அப்போதும் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், மேலிட உத்தரவை சிரமேற்று வருமானவரித்துறை ஆய்வாளர் காயத்ரியின் கதறலை கண்டு கொள்ளாமல், மொபைல் போனில், எதையோ பார்த்து சிரித்தபடி இருந்தார் . இதுதொடர்பான, வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி சமூக வலைதள நபர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது இதைப்பார்த்த வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் அரசு அதிகாரி என்று தெரிந்தும், இன்ஸ்பெக்டர் நடந்து கொண்ட விதத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.