இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி எப் 12’ ராக்கெட் மூலம் ‘என்.வி.எஸ் 01’ செயற்கைக்கோள் நேற்று காலை, 10:42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 19வது நிமிடத்தில், அதில் இருந்து செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்துவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுற்றுப்பாதையை அடுத்தடுத்து உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். பூமி சுற்றும் திசைக்கு ஏற்ப ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளில் முதன் முதலாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த ‘என்.வி.எஸ் 01’ செயற்கைக்கோளின் எடை, 2,232 கிலோ. இது, கடல், வான்வழி, தரை வழி போக்குவரத்தின் வழிகாட்டி சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். அதேபோல, ஜி.எஸ்.எல்.வி 12 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல்.வி வகையில் இஸ்ரோ அனுப்பிய, 15வது ராக்கெட்டாகும்.