கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், பாரதம் எல்லையற்ற இடங்களைக் கடந்து வந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியப் பாதுகாப்புத் துறை மாநாடு 2023’ல் உரையாற்றிய அவர், பாதுகாப்புத் தளவாடங்களுக்கு உள்நாட்டு வடிவமைப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தியை ஊக்கப்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு கொள்கை முன்முயற்சிகளைப் பிரதமர் மோடி மேற்கொண்டார். இதன் மூலம் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு பாரதத்தை மேம்படுத்தியிருக்கிறார். இதன் விளைவாக முந்தைய சுமார் 60 ஆண்டுகளில் செய்யப்பட்ட முன்னேற்றங்களை விண்வெளித் துறை பாய்ச்சல் வேகத்தில் விஞ்சியுள்ளது. பாதுகாப்புத் துறையும், விண்வெளித்துறையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இவற்றின் துரிதமான, உள்நாட்டு தன்மையுள்ள வளர்ச்சியை இணைப்பதில் உள்ள கொள்கை இடைவெளிகளை குறைக்கவும் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார். விண்வெளித்துறை தற்போது தனியார் பங்கேற்புக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 3 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன. 2017ல் சார்க் செயற்கைக்கோள் இயக்கத்தில் தொடங்கி லார்சன் அண்ட் டப்ரோ, ஹெச்.ஏ.எல் ஆகியவற்றின் மூலம் 5 பி.எஸ்.எல்.வி சிறப்பு ஏவு வாகனங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. நமது இளைய மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் பலத்தாலும் புதியன கண்டுபிடிக்கும் ஆற்றலாலும் வரும் காலத்தில் உலகளாவிய விண்வெளித் தொழில்நுட்பத்தில் பாரதம் தலைமையேற்கும்” என்று கூறினார்.