ஜூன் மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில்கள் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படும். குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு சில மாநிலங்களைத் தவிர அனேகமாக அனைத்து மாநிலங்களிலும் இது இயங்கும் என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றுடன் பேசியோய அவர், “உதாரணமாக, தற்போது வந்தே பாரத் ரயிலை திரிபுராவில் இயக்க முடியாது. ஏனெனில் அந்த மாநிலத்தில் பாதை மின்மயமாக்கல் இன்னும் முழுமையடையவில்லை. வந்தே பாரத் ரயிலுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஓடுவதற்கு பாதையின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை மின்மயமாக்கல் அவசியம். எங்கள் இலக்கு 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிப்பது. அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்குவதே ஆகும். நீண்ட தூர வந்தே பாரத் ரயில்களுக்கான ஸ்லீப்பர் டிசைன் தற்போது தயாராகி வருகிறது. அதன் முழுமையான தயாரிப்பானது மார்ச் 2024ல் தொடங்கும். ரயில் பெட்டியின் உட்புறம், போகி வடிவமைப்பு, ஸ்லீப்பர் கோச்சின் மின் உபகரணங்கள், வாகனக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐ.சி.எப் தவிர லத்தூரில் உள்ள எம்.சி.எப்பிலும் இதன் உற்பத்தித் தொடங்கும். தற்போது வந்தே பாரத் ரயிலில் எக்சிகியூட்டிவ் கிளாஸ் மற்றும் நாற்காலி இருக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. ஸ்லீப்பர் கோச்சுடன் கூடிய வந்தே பாரத் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயங்கும். போக்குவரத்துத் தேவையைப் பொறுத்து இந்த ரயில் பெட்டிகளின் கட்டமைப்பு 8 பெட்டிகள் முதல் 20 பெட்டிகள் வரை இருக்கலாம். இதற்காக ரயில் பாதைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்படுத்தப்பட்ட பாதையில் வேகம் மேலும் அதிகரிக்கும்” என கூறினார். மேலும், “வந்தே பாரத் ரயிலின் மெட்ரோ ரயில் பிரிவான ‘வந்தே மெட்ரோ’வைப் பற்றி குறிப்பிட்ட அவர், வந்தே மெட்ரோ நகரம் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் 100 கி.மீ தூரம் இயக்கப்படும். வந்தே மெட்ரோ ஒரு புதிய வடிவமைப்பு. வந்தே மெட்ரோவின் முன்மாதிரி மார்ச் 2024க்குள் தயாராக இருக்கும். ரயில்வேக்கு தற்போது அதிகளவில் ஒதுக்கீடு கிடைத்து வருகிறது. முன்பு ரயில்வேக்கு ரூ. 40,000 கோடி மொத்த பட்ஜெட் ஆதரவு கிடைத்தது. ஆனால், இப்போது அது ரூ. 2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாங்கள் ஒரு வருடத்தில் இரட்டிப்பு மற்றும் மல்டி டிராக்கிங் உள்ளிட்ட புதிய ரயில் பாதைகளைச் சேர்க்கிறோம், அதாவது சுவிட்சர்லாந்தின் முழு ரயில் நெட்வொர்க் தூரம் என்பது ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் சேர்க்கப்படுகிறது.” என்றார்.