எஸ்.டி.பி.ஐ மனு தள்ளுபடி

பி.எப்.ஐ எனும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக, 2022ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அந்த அமைப்பின் மீது, ‘உபா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள, எஸ்.டி.பி.ஐ அலுவலகத்திற்கு அம்மாநில அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தபோது அதில், எஸ்.டி.பி.ஐ பெயரை சேர்க்கவில்லை. ஆனால், மாநில அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எஸ்.டி.பி.ஐ அலுவலகத்திற்கு சீல் வைத்தது’ என்றார். அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ‘பி.எப்.ஐ அமைப்பு தங்களது நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரணை செய்து முழுமையான தகவலை சேகரித்த பின்னரே அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”எஸ்.டி.பி.ஐ அலுவலகத்திற்கு சீல் வைத்து, மாநில அரசு வெளியிட்ட அறிக்கை, உபா சட்ட பிரிவு 8 மற்றும் அதன் துணைப்பிரிவு 3, 4ன் கீழ் உள்ளது. தான் ‘சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே மாநில அரசு சீல் வைத்து உள்ளது. இதனால், மாநில அரசு அதிகாரத்தை, தவறாக பயன்படுத்தியது என்று கூற முடியாது” என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.