காங்கிரஸ் ஆட்சியினரால் ஹிந்துக்கள் முகாம் இடிப்பு

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் பாகிஸ்தானில் இருந்து பாரதத்துக்கு அகதிகளாக வந்த ஹிந்துக்களின் முகாம் ஒன்று கடந்த ஏப்ரலில் அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் ஆட்சியினரால் இடித்துத் தள்ளப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஜெய்சால்மரில் உள்ள பாகிஸ்தான் புலம் பெயர்ந்த ஹிந்துக்களின் முகாம் இடிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகாம் இடிப்பதை எதிர்த்ததற்காக காவல்துறையினர் நடத்திய கண் மூடித்தனமான தடியடி தாக்குதலில், தேவி மாயி, ஹஸ்து தேவி மற்றும் மப்தி தேவி என்ற மூன்று புலம்பெயர்ந்த பெண்கள் மிகக் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அந்த பகுதி குடியிருப்புகளை காலி செய்யுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், மறுநாள் காலையில் அவர்களது 28 வீடுகள் இடிக்கப்பட்டதாகவும் கிஷன்ராஜ் பில் என்ற பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். மாவட்ட ஆட்சியர் டினா டாபி ஊடகங்களிடம் கூறுகையில், அமர்சாகர் கிராமத் தலைவர் இந்த ஹிந்து குடிபெயர்ந்தவர்களின் அத்துமீறல்கள் குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்து வருகிறார். அந்த நிலம் அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அறக்கட்டளைக்கு சொந்தமானது. வருங்காலத்திலும் இது போன்ற பல ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்ற அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதுவரை பாரதக் குடியுரிமை பெறாத பாகிஸ்தான் குடியேறியவர்களின் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிடவில்லை என்று கூறினார். பெண்கள் மீதான காவல்துறையின் லத்தி சார்ஜ், அங்கிருந்த குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் விடப்பட்டது, எங்கு போவதென்றுத் தெரியாமல் அவர்கள் அலையும் காட்சிகள் எல்லாம் பார்ப்போரிடையே கண்ணீரை வரவழைத்தது.