தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் வினியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ஊரக பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் வினியோகம் தேசிய அளவில் 2018 மற்றும் 2019ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கடுத்த நிதியாண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இதே காலகட்டத்தில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் வினியோகம், அடுத்த நிதியாண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதற்கு மத்திய அரசு சார்பில் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் வினியோகம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் உதவ மத்திய அரசு தயாராக உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.